ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவில் இறந்தவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே கோபாலப்பட்டினத்தில் இயங்கி வரும் தென் கொரியாவைச் சார்ந்த எல்.ஜி பாலிமர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 குழந்தைகள் உள்பட 13க்கும் அதிகமான பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆந்திர அரசு உடனடியாக கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டும்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற விபத்துகள், எதிர்காலத்தில் நேராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்' இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:
விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்