சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேமுதிக படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில், வெகு விரைவில் தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இது குறித்து அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் முடிந்தவுடன் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகத்தில் நடத்துவதாக இருந்தது.
ஆனால் கரோனா ஊரடங்கு உடனடியாக அமலுக்கு வந்ததாலும், கரோனா பரவல் காரணமாகவும், ஒரே இடத்தில் அனைவரும் கூட்டம் சேரக்கூடாது என்பதற்காகவும் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியவில்லை.
வெகுவிரைவில் ஊரடங்கு காலம் முடிந்தவுடன் அனைத்து மாவட்டச் செயலாளர்களை தலைமைக் கழகத்திற்கு நேரில் அழைத்து ஆலோசனை நடத்தவிருக்கிறோம்.
இதில் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். தேர்தலுக்கு முன்பு யாருடன் கூட்டணி வைப்பது குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கிறோம்.
அதேபோல் தேர்தல் முடிந்த இந்த நேரத்திலும் மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து இனிவரும் காலங்களில் தேமுதிகவை எப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதை நாம் அனைவரும் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

மேலும் வரும் காலத்தில் தேமுதிகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.