சென்னை: தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 24ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனால், தமிழ்நாடு முழுவதும் அரசுப்போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
விரைவுப்பேருந்துகளை பொறுத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும் என்று இருந்தது. அந்த வகையில் அக்டோபர் 20ஆம் தேதிக்கான முன்பதிவு நேற்று(செப்.20) தொடங்கியது. தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு வெளியூர் செல்பவர்களுக்கு, அக்டோபர் 21ஆம் தேதி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளவர்கள் இன்று(செப்.21) முதல் முன்பதிவு செய்யலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக்கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது செயலி வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பேருந்து நிலையங்களில் உள்ள முன் பதிவு மயங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்துத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் பண்டிகை காலங்களில் அரசு நிர்ணயத்திற்கும் கட்டணத்தைத்தவிர கூடுதலாக வசூல் செய்யப்பட்டால் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தார். பண்டிகை காலங்களில் வெளியூர் செல்பவர்கள், செல்லுதல் மற்றும் திரும்புதல் டிக்கெட்டை ஒரே நேரத்தில் பதிவு செய்யும் பொழுது 10% சலுகையும் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆம்னி பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்... திருச்சிக்கு 520 -1470