சென்னை: தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா பொருள்களை விற்பனைசெய்வதற்கு 2013ஆம் ஆண்டுமுதல் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பொருள்களை முழுமையாக விற்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின்போது சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்கள் கடைகளில் கிடைக்கின்றன எனக் கொண்டுவந்து காண்பித்தனர்.
போதைப்பொருள் விற்பனையைத் தடை செய்க
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கரோனா தொற்று இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டினர். இந்நிலையில் திமுக ஆட்சியிலும் குட்கா, பான் மசாலா பொருள்கள் கடைகளில் எளிதாகக் கிடைத்துவருகின்றன.
இரண்டு மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடைசெய்ய வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், "தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தி குட்கா, பான் மசாலா பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
இதுபோன்ற பொருள்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் தலைமையிலும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சுகாதாரத் துறை துணை இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் மாநகராட்சி அல்லது நகராட்சி உறுப்பினர், மாவட்ட வணிகவரித் துறை அலுவலர், மண்டலப் போக்குவரத்துத் துறை அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், மேலும் ஒரு அலுவலர் ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம்செய்யப்பட வேண்டும்.
தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்கக் கூடாது என்பது குறித்து இந்தக் குழுவினர் உள்ளாட்சி நிர்வாகத்திடம் கூட்டம் மூலம் தெரிவிக்க வேண்டும். மாவட்ட அளவிலான குழுவினர் வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
புகார் தரலாம் - ரகசியம் காக்கப்படும்
மேலும் அப்போது தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்பனைசெய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுப்பதுடன், இதுபோன்ற பொருள்களை விற்பனை செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அறிவுறுத்த வேண்டும்.
தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்பனைசெய்வது கண்டறிந்தால் பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ, காவல் துறை கட்டுப்பாட்டு எண் 100-க்கோ அழைத்து உள்ளாட்சி நிர்வாகத்திற்குப் புகார் தரலாம். புகார் குறித்து ரகசியம் பார்க்கப்படுவது உடன் நடவடிக்கையும் எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.