அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவிற்கு 23, பாஜகவிற்கு 20 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி ஆகிய இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேமுதிக, தமாகாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருப்பினும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமுமின்றி தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. அதோடு, தோழமைக் கட்சிகளான புதிய நீதிக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவையும் இடங்கள் கேட்பதால் அதிமுக விழி பிதுங்கி நிற்கிறது.
இந்நிலையில், 170 தொகுதிகளில் நிற்க முடிவு செய்துள்ள அதிமுக, அதற்கான வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. அந்த வகையில், ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஆனால், தங்களிடம் தேர்தலில் சீட் கேட்ட ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில், ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், தேர்தலில் போட்டியிட மாவட்ட வாரியாக தொகுதிக்கு 3 பேரின் பெயர்களை மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரை செய்துள்ள நிலையில், அவர்களில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் சிலரின் பெயர்களும், மேலும் அந்தத் தொகுதியில் நன்கு அறிமுகமானவர்களின் பெயர்களும் இல்லாமல் இருப்பதும் சிக்கலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இதனால் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை போக்க, மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடர்ந்து இருவரிடமும் பேசி வருகின்றனர். இதனாலேயே இன்று அதிமுக சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ’அதிக தொகுதிகள் திமுக தரும் என எதிர்பார்த்தோம்; பரவாயில்லை’