தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் உதவித் தொகையை மூன்றாயிரமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், தனியார் துறையில் ஐந்து விழுக்காடு வேலை வழங்கக்கோரியும் மாநிலம் முழுவதும் அரசு அலுவலங்களில் குடியேறும் போராட்டத்தினை நடத்திவருகின்றனர்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர் அலுவலகத்தில் இன்று தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகக் கூறி மாற்றுத்திறனாளிகள் குடியேறியுள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உணவை ஆணையர் அலுவலகத்தில் அடுப்பு மூட்டி சமைத்து உண்ணத் தொடங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச்செயலாளர் நம்புராஜன் கூறும்போது, "மாற்றுத்திறனாளிகளுக்கு அண்டை மாநிலங்களான தெலங்கானா, கேரளா, புதுச்சேரியில் அதிகபட்சமாக மூன்றாயிரம் ரூபாய் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக மாதாந்திர உதவித்தொகை ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிமுக அரசு உயர்த்தி வழங்கவில்லை. இதனை உயர்த்தி வழங்க வேண்டும் எனப் பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016இன்படி தனியார் துறையில் குறைந்தபட்சம் ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். ஆனால் சட்டம் அமுலுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. எனவே தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்க ஊதியம் அளித்து வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தர வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றுமுதல் 200 அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தியுள்ளோம். அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.