இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்,
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த முறையில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் குழந்தைகள் சேர்க்கை, பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என மாவட்டதந்தோறும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டுச் சான்றிதழும், 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.
2018 -19 ஆம் ஆண்டுக்கு 'கனவு ஆசிரியர்' திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர் கம்ப்யூட்டர், செல்போன் ,ஸ்மார்ட் போர்டு, வீடியோ மூலம் பாடம் நடத்துதல், இணையதள பயன்பாட்டு பலகை உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்த தெரிந்தவராகவும், அறிவியல் தொழில் நுட்பத்தையும் மாறிவரும் கற்றல்-கற்பித்தல் தொழில்நுட்பத்தையும் உபயோகப்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கும் திறன் படைத்தவராகவும் இருக்க வேண்டும்.
அதேபோல் பள்ளிகளில் கல்வி இணை செயல்பாடுகளில் அதிக அளவில் மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கி, பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து, மரங்கள் நடப்பட்டு பசுமை சூழல் நிறைந்த பள்ளி வளாகமாக உருவாக்கி, சுத்தமாக பராமரிப்பதுடன், அதனால் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தல், தன்னுடைய தனித் திறமையால் பள்ளியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் உதவிபுரியக் கூடியவராகவும், பள்ளியில் சுமுகமான கற்றல்-கற்பித்தல் சூழ்நிலை உருவாக ஒத்துழைப்பு அளிக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.
ஆசிரியர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியில் பயிலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவராகவும், மாணவர்களை உளவியல் அடிப்படையில் அணுகி வழி நடத்துபவராகவும் இருக்க வேண்டும் .
இந்த விருது, வகுப்பறையில் கற்பிக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். நிர்வாகப் பணியில் ஈடுபடும் தலைமையாசிரியர் உள்ளிட்ட யாருக்கும் அளிக்கக் கூடாது. மாவட்டத்தோறும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 'கனவு ஆசிரியர்' விருது வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.