சென்னை:தமிழ்நாட்டில் செயல்படும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் ,கல்வியியல் கல்லூரிகள் போன்றவற்றில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் உள்ளன. மேலும் பெரும்பாலான கல்லூரிகளில் கழிப்பிட வசதி கூட முறையாக இல்லாமல் இருக்கிறது. ஆனால் தனியார் கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அரசுக் கல்லூரிகளின் தோற்றம் மோசமாகவும், உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரி கல்வியல் கல்லூரியில் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஏற்கனவே அந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களைக் கொண்டு சங்கங்களை ஏற்படுத்த வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரிகளில் முன்னாள் மாணவர்கள் சங்கம் இருந்து செயல்பட்டு வந்தாலும் அதனைப் புதுப்பித்துப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். முன்னாள் மாணவர்கள் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வசதியாக கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னாள் மாணவர்கள் சங்கம் அமைக்கும் பணியும் மற்றும் புதுப்பிக்கும் பணியை வரும் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். கல்லூரியில் மேம்பாட்டிற்குத் தேவையான நிதிப் பற்றாக்குறையாக இருப்பதாகவும் வரும் காலங்களில் நிதிநிலையைப் பொருத்து படிப்படியாகக் கல்லூரிகள் மேம்படுத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:காவல்துறைக்கு முழு சுதந்திரம்- சேகர் பாபு!