முதன் முதலாக படத்தில் நடித்து உள்ளீர்கள் அதைப் பற்றி?
'சுட்டுப் பிடிக்க உத்தரவு' என்ற படத்தில் முதன்முதலாக நான் நடித்துள்ளேன், இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரில்லர் எல்லாருக்கும் பிடிக்கும். நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் குடும்பத்தோடு இந்த படத்தைப் பார்த்தேன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் என்னுடைய மகன் என் முகத்தை திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே இருந்தான்.
நான் ஒரு இயக்குநராக முதல் ஃபிரேமில் இருந்து இறுதிவரை ஒரு ஆக்ஷன் படம் இயக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அப்போதுதான் இந்த ஸ்கிரிப்ட் என்னிடம் கூறினார்கள், உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பில் கலந்துகொண்ட 25 நாட்களும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. எந்த பிரச்னையும் இல்லாமல் அனுபவித்து நடித்தேன். என்னுடன் பணிபுரிந்த அனைவரும் என்னிடம் கூறினார்கள் நீங்கள் இவ்வளவு ஜாலியாக பழகக்கூடியவரா? என்று எங்களுக்கு தெரியாது என்று என்னிடம் கூறினார்கள்.
இந்த படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் பற்றி...
நானும் விக்ராந்தும் நண்பர்களாக வருகிறோம். முதல் ஃபிரேமில் நாலு பேர் வழிபறி செய்துவிட்டு செல்வார்கள், அந்த நாலு பேரும் கொள்ளையடித்த வங்கியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தவர்கள் என்று கதை தொடங்கும், இந்த படத்தில் கதாபாத்திரத்தின் பெரிய டீடெயில்ஸ் எதுவும் இருக்காது.
மற்றொரு இயக்குநரின் இயக்கத்தில் நீங்கள் நடிக்கும்போது உணர்ந்த விஷயங்கள்?
நான் முதலில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு எந்த காரணத்தை கொண்டும் இயக்கத்தில் தலையிடக்கூடாது என்ற எண்ணத்தோடுதான் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றேன். அதனால், நான் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை இயக்குநர் என்ன கூறினாரோ அதை கேட்டு நடித்தேன். சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்!
தொடர்ந்து நீங்கள் படத்தில் நடிப்பீர்களா..?
இல்லை, நான் கண்டிப்பாக தொடர்ந்து நடிக்க மாட்டேன்! வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏதாவது கிடைத்தால் மட்டும் நடிப்பேன். இப்போது உள்ள கமிட்மென்ட்ஸை முடிக்க எனக்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகும், என்னுடைய முதல் இலக்கு இயக்கம்தான் அதில்தான் என்னுடைய முழு கவனமும் இருக்கும்.
இந்தப் படத்தைப் பார்த்த உங்கள் குடும்பத்தினர் என்ன கூறினார்கள்?
திரில்லாக இருந்தது எனது மனைவி கூறினார். என் பையன் படம் பார்த்துவிட்டு எனக்கு முத்தம் கொடுத்தான், அது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது, படம் சூப்பராக இருந்தது என்று கூறினான். படம் பார்த்த உடனே எனக்கு துப்பாக்கி வேண்டும் என்று என்னிடம் கேட்டான்.
இந்த படத்தில் முழுக்க முழுக்க துப்பாக்கியை பயன்படுத்துகிறீர்கள்! இதற்காக பயிற்சிப் பெற்றீர்களா...?
அதெல்லாம் ஒன்றுமில்லை, விஜயகாந்த் முதல் எத்தனை ஆக்ஷன் படங்கள் பார்த்து இருக்கிறோம்! அதில் ஒன்று அடிச்சுவிட வேண்டியதுதான். ஆனால், ஏற்கனவே இயக்குனர் அனைத்து துப்பாக்கிகளையும் எப்படி கையாள வேண்டும் என்று அறிந்து வைத்திருந்தார். அதை அவர் எங்களிடம் விளக்கி கூறினார். அதன்படி நான் நடித்தேன்.