பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ”கரோனா தொற்று காரணமாக பள்ளிகளை முழுமையாக திறக்க முடியாத நிலை உள்ளதால், குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசி செலுத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டுமென மாநில தடுப்பூசிக் குழு அறிவுறுத்தியிருந்தது.
இதன்படி நவம்பர் மாதம் முழுவதும் வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சிறப்பு முகாம்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து நாள்களிலும் தடுப்பூசி செலுத்த வேண்டுமென அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிடுகிறது.
இதில் முகாமில் ஐந்து முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளை தொண்டை அடைப்பான், டெட்டனஸ், கக்குவான் இருமல் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும் டிபிடி தடுப்பூசி, 10 முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறிய ரத்தக் காயத்திற்கு ஊசி போடுவதைத் தவிர்க்கும் டிடி தடுப்பூசி செலுத்தும் பணி ஆகியவை நடைபெறும்.
இந்த முகாமுக்கான பணிகளை தொடங்கும் விதமாக 1ஆம் தேதி மாவட்ட அளவில், 2ஆம் தேதி வட்டார அளவில், 3ஆம் தேதி கிராம அளவில் கூட்டங்ளை நடத்திய மைக்ரோ திட்டங்களை தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்ட குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் 24 மணி நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் நவம்பர் மாதம் முழுவதும் அங்கன்வாடி, வருவாய்துறை, பள்ளிக்கல்வி துறை உள்பட அனைத்து ஊழியர்களையும் பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர்- பிரதமர் நரேந்திர மோடி!