சென்னை: மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள 'செல்ஃபி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் மதிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், சுப்பிரமணியம் சிவா, நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் அறிவு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் மதிமாறன் பேசுகையில்,
’இப்படத்தில் உங்களுக்கு ஏதாவது பிடித்து இருந்தால் வெற்றிமாறன் அளித்த ஊக்கம்தான். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த துறையில் அண்ணனாக எனக்கு உறுதுணையாக இருக்கிறார். கல்லூரியில் சீட் வாங்கித் தருவதில் இருக்கும் வியாபாரத்தைப் பற்றி இப்படம் உருவாகியுள்ளது’ என்றார்.
பாடலாசிரியர் அறிவு பேசுகையில்,
'இப்படத்தில் ஆறு பாடல்கள் எழுதியுள்ளேன். நான் எனது கல்லூரி விழாவில் ஜி.வி.பிரகாஷ் ஆடுகளம் படத்தில் வரும் ”ஒத்த சொல்லால” பாடலைத்தான் பாடினேன். இப்போது இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. மென்மையான பாடல்கள் எழுதியது வித்தியாசமான அனுபவமாக உள்ளது’ என்றார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் பேசுகையில்,
’மதிமாறனை எனக்கு அறிமுகப்படுத்திய வெற்றிமாறனுக்கு நன்றி. கல்லூரி மாணவர்கள் போல் எல்லோரும் ஒன்றிணைந்து இப்படத்தை எடுத்துள்ளோம். வணிகரீதியில் எப்படி சிக்கனமாக படம் எடுக்க வேண்டும் என்பதற்கு இப்படம் உதாரணமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் இதில் நடித்த நடிகர்களுக்கு நன்றி’ என்றார்.
மிஷ்கின் பேசுகையில்,
இயக்குநர்கள் பற்றி வெற்றிமாறன் புறம்பேசியது கிடையாது. வெற்றி எப்பொழுதும் சினிமாவை பேசிக்கொண்டே இருந்தான். அதனால்தான் இப்போது மிகப்பெரிய இயக்குநராக உள்ளார். எனக்கு கிடைத்த மிகப்பெரிய நண்பன் வெற்றி. இப்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வில்லன் கௌதம் வாசுதேவ் மேனன்தான். இப்போது வருகின்ற இயக்குநர்கள் சினிமாவை பார்க்கும் பார்வை அழகாக உள்ளது’ என்றார்.
வெற்றிமாறன் பேசுகையில்,
’மதிமாறன் ஒரு குறும்படம் இயக்கிவிட்டு என்னிடம் காட்டினான். ஆடுகளம் படத்தில் சேவல் சண்டை கிராஃபிக்ஸ் பணிகள் இப்போது காமெடியாக இருக்கலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. தயாரிப்பாளர் தாணு இப்படத்தில் தனக்கு மூன்று மடங்கு லாபம் என்று கூறியுள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்பே லாபம் வருவது இப்போது கடினம். கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. படம் பார்த்தேன் நன்றாக உள்ளது. படம் கமர்ஷியலாக இருப்பது தவறு கிடையாது. நம் குறை என்பது நமக்குத் தெரியும். அதை மனதில் வைத்துக்கொள். எனக்கு வெற்றிமாறன் என்று பெயர் வைத்தது மதிமாறனின் தந்தைதான்’ என்றார்.
இதையும் படிங்க: ஆக்சன் அவதாரம் எடுத்துள்ள ஆண்ட்ரியா!