சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று வனத்துறை (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம்), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அதில் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன், “பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் இதுவரை 60,000 மரக்கன்றுகளை திமுக அரசு வழங்கியுள்ளது. அதிலுள்ள தவறுகளை சரிசெய்து வளமான மரக்கன்றுகளாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒக்கி, வர்தா, தானே, கஜா போன்ற புயல்கள் வந்தாலும் வனப்பரப்பு குறையவில்லை, மாறாக அதிகரிக்கப்பட்டது” என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை சுட விரைவாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். "வனத்தின் கண்கள்" என்று அழைக்கப்படும் வேட்டைத்தடுப்பு காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.12,000-இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்த வேண்டும். வனத்துறைப் பணிகளில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க காலியிடங்களை உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும், “மருத்துவ தாவரங்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேயிலை தேநீர் (TANTEA) தொழிலாளர்களுக்கான போனஸ் தொகை 20%-இல் இருந்து 10%-ஆக குறைக்கப்பட்டது வருத்தத்துக்குரியது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாயலத்துக்குள் சுற்றுச்சூழல் உள்ள இடத்தில் சிமெண்ட் ஆலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, சரணாலயத்தை பாதுகாக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ட்ரோன் மூலம் கரும்பு பயிர்களுக்கு களைக்கொல்லி மருந்து தெளிப்பு!