தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள இரணியன் அல்லி கிராமத்தைச் சேர்ந்த செந்தில், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகச் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 14 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வரும் தன் மகனை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி, அவரது தாய் அமுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஆறு வாரங்களில் பரிசீலிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, மாநில அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ”முன் விடுதலை கோரும் மனுக்களை சிறை விதிகளுக்குட்பட்டு சிறை அதிகாரி பரிசீலித்து, அவர் திருப்தி அடையும்பட்சத்தில், சிறைத்துறைத் தலைவருக்கு அனுப்புவார் என்றும், அதன் பின்னர் மாநில அரசின் உள்துறைக்கு அனுப்பப்பட்ட பிறகு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்” எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசின் பரிந்துரையைத் தன்னிச்சையாக ஆராயும் ஆளுநர் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே, விடுதலை முடிவு என்பது இருக்கும் எனத் தெரிவித்த அவர், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், யோகா செந்திலை முன்கூட்டியே விடுதலை கோரிய மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதைக் கேட்ட நீதிபதிகள், கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றனர். தருமபுரி பேருந்து தீ வைப்பு சம்பவத்தில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை, அரசு முன் கூட்டியே விடுதலை செய்திருப்பதையும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுவிக்க அரசு தீர்மானம் இயற்றியதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஒவ்வொரு வழக்கிற்கும் அரசு வெவ்வேறு நிலைப்பாட்டை எடுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.
சந்தர்ப்ப சூழலால் குற்றம் புரிந்த செந்தில் போன்றவர்களை விடுவிப்பதில், சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டுவதாகவும் கூறினர். 10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களை விடுவிக்க வேண்டுமென அரசு முடிவெடுத்தால், அது அனைவருக்கும் சமமாகத்தானே இருக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், அரசியல் அழுத்தம் காரணமாக இதுபோல முடிவுகள் எடுக்கப்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பினர். யோகா செந்தில் விவகாரத்தில், அரசு மாற்று நிலைப்பாடு எடுக்கக் காரணம் என்ன என விளக்கமளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கைத் தீர்ப்புக்காக நாளைக்குத் ஒத்திவைத்தனர்.