சென்னை: இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
கரோனா பரவல் காரணமாக, மாநில அரசிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். 2020 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உடன் அனைத்துத் துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர். இதில் கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக எந்த அளவிற்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவுகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து அடுத்தாண்டில் என்னென்ன திட்டங்களுக்கு கூடுதலாக செலவுகள் ஏற்படும் என்பது குறித்தும் தலைமைச் செயலாளர்கள் அரசுத் துறை செயலாளருடன் துணை முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.