சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் முதல் 24ஆம் தேதிவரை நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லும்போது அவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் எந்தெந்த மாணவர்கள் சேர்கின்றனர் என்ற விவரத்தை அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றும், அவர்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எச்சரிக்கை சுற்றறிக்கை
தொழில்நுட்ப கல்வி இயக்குனர் எச்சரிக்கைக்கு பிறகும், பல மறைமுகமான வகையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், பொறியியல் கல்லூரிகளில் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களிடம் பல கல்லூரிகள் தொடர்ந்து கட்டணம் வசூலித்தால், ஏஐசிடிஇ மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே ஏதேனும் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் மாணவர்களுக்கு அதனை திரும்ப செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மாணவர்களிடையே கரோனா... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...