சென்னை: பாரிமுனையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் தலைவர் நெல்லை முபாரக் (மார்ச் 11) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'நடந்து முடிந்த வெளியான, 5 மாநில தேர்தல் முடிவுகளில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதனை மதச்சார்பின்மை அமைப்புகளின் தோல்வியாகவும், மதச்சார்பின்மை அமைப்புகள் ஒன்றாக செயல்படாததால் மக்கள் மனதில் மதவாதம் இடம்பெற்றுள்ளது. இந்த மதவாதத்தில் போட்டியிட்டதால் பாஜக வெற்றி அடைந்துள்ளது.
எஸ்டிபிஐ பாராட்டு
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய விவகாரத்தில் தமிழ்நாடு அரசை எஸ்டிபிஐ கட்சி பாராட்டுகிறது. தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை நீதிமன்றம் முக்கியமாகக் கருதியுள்ளது. இதேபோல் மேலும், மற்ற 6 பேரின் பிணை மற்றும் 7 பேரின் விடுதலைக்கும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசின் உரிமை பேரறிவாளன் விவகாரத்தில் நிலை நாட்டப்பட்டுள்ளது.
38 இஸ்லாமியர்கள் விடுதலை
இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும், 38 இஸ்லாமியர்களின் விடுதலை சாத்தியமாகும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்காக 38 இஸ்லாமியர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்
மேலும், அவர்களின் விடுதலை ஒன்றிய அரசு கையிலோ, நீதிமன்றத்தின் கையிலோ இல்லாமல் மாநில அரசின் கையில் இருப்பதாக தற்போது வந்துள்ள ஜாமீன் நிகழ்வு உறுதி செய்துள்ளது. இந்த 7 பேர் விடுதலை மற்றும் 38 முஸ்லிம்களின் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 26ஆம் தேதி திருநெல்வேலியில் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நீண்ட நாட்களாக தொடர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வு நடந்து கொண்டே இருப்பதை தடுக்க, மற்ற மாநிலங்களைப் போல மீனவர்களுக்காக பாதுகாப்பு அளிப்பதற்கு தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். இனி வரும் காலங்களில் ஒரு மீனவரும் தாக்கப்படவில்லை என்ற நிலையைத் தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை
மேலும் டாஸ்மார்க் கடை அருகே பார்கள் இயங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. ஆனால் இதற்கு தமிழ்நாடு அரசு எதிராக மேல்முறையீடு செய்து இருப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி தமிழ்நாட்டில் படிப்படியாகப் பூரண மதுவிலக்கை கொண்டு வரத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க, தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு திரும்பும் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளை அவர்கள் இங்கேயே தொடர மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தரவேண்டும்' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வர்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மார்ச் 23 வரை அவகாசம்!