சென்னை: எம்ஆர்பி மூலம் தேர்வுசெய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர், தங்களை பணி நிரந்தரம்செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எம்ஆர்பி தேர்வு மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட செவிலிகளுக்குப் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். எனவே, தங்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினர்.
ஒப்பந்த அடிப்படையில் பணி
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என வலியுறுத்தி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் கூட்டமைப்பின் கௌரவத் தலைவர் ரவீந்திரநாத், பொதுச் செயலாளர் மருத்துவர் ஏ.ஆர். சாந்தி, லேப் டெக்னீசியன் சங்கத் தலைவர் தனவந்தன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, 2015ஆம் ஆண்டில் மருத்துவ தேர்வாணையம் மூலம் 7,500 பேர் தேர்வுசெய்யப்பட்டு, ஆறு ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
உழைப்புச் சுரண்டல்
அவர்களில் 3,500 பேருக்கு இன்னும் பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனடியாகப் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.
அவர்கள் வெறும் ரூ. 14 ஆயிரம் பணத்தை மட்டுமே தொகுப்பூதியமாக பெற்றுக்கொண்டு பணியாற்றுவது என்பது வேதனையானது. இது கடுமையான உழைப்புச் சுரண்டலாகும்.
![எம்ஆர்பி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-mrb-nurses-protest-script-7204807_16082021125723_1608f_1629098843_1039.jpeg)
2019ஆம் ஆண்டு மீண்டும், அடுத்த எம்ஆர்பி தேர்வு வைத்து ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 2,000 பேருக்கும், 2020ஆம் ஆண்டு கரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 2,000-க்கும் மேற்பட்ட செவிலியருக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.
செவிலியருக்கு காலதாமதம்
கரோனா காலகட்டத்தில், மக்களின் நலனுக்காக தன்னுயிர், குடும்பம் பற்றி கவலைப்படாமல் வெறும் ரூ. 14,000 மட்டுமே தொகுப்பூதியமாக பெற்றுக்கொண்டு, தற்காலிக செவிலியர் அனைவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களில் பலருக்கு, அந்த குறைந்த ஊதியமும், காலதாமதமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சேர்த்து வழங்கப்படுகிறது.
அவர்களுக்கு, நிரந்தர செவிலியருக்கு வழங்கப்படும் விடுப்பு போன்ற இதரச் சலுகைகள் இல்லை. இத்தகைய அவலநிலையில் பணிபுரிந்துவரும் செவிலியருக்கு, இனியும் பணி நிரந்தரம் வழங்கிடாமல் காலதாமதம் செய்வது சரியல்ல.
பணிநீக்கம் செய்யக்கூடாது
ஒப்பந்த செவிலியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதிலும், அதற்கான ஊதியம் வழங்குவதிலும் கூட பிரச்னைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இப்பிரச்னையை உடனடியாக சரிசெய்ய வேண்டும். கரோனா காலகட்டத்தில் தற்காலிகமாகப் பணிநியமனம் செய்த எந்த செவிலியரையும் பணிநீக்கம் செய்திடக்கூடாது.
எம்ஆர்பி மூலம் நியமிக்கப்படும் செவிலியர்களை நிரந்தர அடிப்படையில், கலந்தாய்வு மூலம் மட்டுமே நியமிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: 'முதலமைச்சரிடம் சத்துணவு ஊழியர்கள் வைத்த வேண்டுகோள்'