சென்னை: பெருநகர சென்னை மாநராட்சியில் கடந்த ஐந்து நாள்களாகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த கல்வியாண்டு தொடங்க இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க பிறப்புச் சான்றிதழ் அவசியம் என்பதால், இந்தத் தாமதம் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சென்னை மாநராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள முக்கியச் சேவையகங்கள் (server) அடிக்கடி பழுதடைந்துவிடுகின்றன என மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இது குறித்து மாநகராட்சி அலுவலகத்தைத் தொடர்புகொண்டால் யாரும் தெளிவான பதிலைத் தருவதில்லை எனவும் பெற்றோர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இ-சேவை மைய அலுவலர்கள் கூறுகையில், "இந்தப் பிரச்சினை ஒரு மையத்தில் இருந்தால் தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறலாம். ஆனால், சென்னை முழுவதும் இந்தப் பிரச்சினை உள்ளது. எனவே மாநகராட்சி அலுவலர்கள் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்" என்றனர்.
மாநகராட்சி அலுவலர்கள், "சென்னை மாநராட்சியில் இணையதளம் மூலமாகப் பிறப்பு இறப்புச் சான்றிதழை ஆராய்ந்து நகலெடுக்கும் வசதி உள்ளது. மேலும் நிறைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்களை அடுத்தடுத்த கல்வியாண்டுகள் தொடங்கும்போது ஒரே நேரத்தில் விண்ணப்பிக்கத் தொடங்குகிறார்கள்.
அப்படி விண்ணப்பிக்கும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் அலுவலர்கள் உடனே சரிசெய்து சான்றிதழ்களை பெற்றோர்களிடம் ஒப்படைக்கின்றனர்" எனத் தெரிவித்தனர்.
இது குறித்து சென்னை பெருநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், "அனைத்து நாள்களிலும் பிறப்புச் சான்றிதழ் வழங்கத் தாமதம் ஏற்படவில்லை. எனினும் இது தொடர்பாக அனைத்து மண்டல அலுவலர்களும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் விரைவில் சரிசெய்யுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்" என்றனர்.
இதையும் படிங்க: உக்ரைனில் திக்... திக்...! மகனை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் கண்ணீர்