சென்னை: கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்திடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க காத்திருந்தனர்.
அப்போது, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து வருவது குறித்து கேள்வி எழுப்பினார். அதனால் கோபமடைந்த விஜயகாந்த், அவரை கடுமையான வார்த்தைகளால் சாடினார். அருகில் இருந்த தேமுதிக அப்போதைய எம்எல்ஏ அனகை முருகேசன் என்பவர் பாலுவை பிடித்து கீழே தள்ளிவிட்டார்.
வழக்கு
இதையடுத்து, விஜயகாந்த் மீது பத்திரிகையாளர் அளித்த புகாரில் கொலை மிரட்டல் விடுத்தல், அவதூறாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், வழிமறித்தல் ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கு ரத்து
அப்போது, மனுதாரர் விஜயகாந்த் தரப்பில் வழக்கறிஞர் வி.டி பாலாஜியும், பத்திரிகையாளர் தரப்பில் வழக்கறிஞர் ஜானகிராமனும் ஆஜரானார்கள்.
அப்போது, பத்திரிகையாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "சம்பவம் நடந்தபோது இருந்த மன அழுத்தம் மற்றும் பிற காரணங்களுக்காக புகார் அளிக்கப்பட்டது. பின்னர் சமரசம் ஏற்பட்டு தற்போது அவருடன் சுமூக உறவுடன் இருப்பதால், அந்த வழக்கை ரத்து செய்வதில் ஆட்சேபனை இல்லை" என தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதீஷ்குமார், விஜயகாந்திற்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ராஜீவ் கொலை விவகாரம்: தமிழ்நாடு ஓய்வு டிஜிபி தொப்பியை ஓப்படைக்க உத்தரவு!