சென்னை தியாகராய நகரில் ஜெயலலிதாவின் சகோதரரின் மகள் தீபா இன்று செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ' அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்த பின்னரும் அதிகமுவில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்போ, இணைப்பு நிகழ்ச்சியோ நடைபெறவில்லை. தொடர்ந்து அதிமுகவில் சேர முயற்சித்தாலும் அதிமுகவில் சேர்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தங்களுக்கு உரிய மரியாதையை அதிமுக கொடுக்கவில்லை என்றும்; ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை தங்களின் குடும்பத்தாரிடம் அனுமதி வாங்காமல் எடுப்பது தண்டனைக்குரியது என்றும் குற்றம் சாட்டினர்.
மேலும் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கலந்தாலோசித்து முடிவு தெரிவிக்கப்படும் எனவும்; மத்திய அரசை கையில் வைத்துக்கொண்டு அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையாக இருக்கிறது எனவும் ஜெ. தீபா தெரிவித்தார்.