தமிழ்நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஏப்ரல் மாதம் முதல் பரவத் தொடங்கியது.
குறிப்பாக மே மாதத்தில் உச்சத்திலிருந்த கரோனா பாதிப்பு, பின்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு, சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
குறையும் கரோனா தொற்று
அந்த வகையில், சென்னையைப் பொறுத்தவரை மே மாதத்தில் நாள் ஒன்றிற்கு கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆறாயிரத்திற்கும் அதிகமாக இருந்து, பின்பு படிப்படியாக 300 ஆக குறைந்தது.
நேற்று (ஜூன் 30) 27 ஆயிரத்து 757 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 257 நபர்களுக்கு மட்டுமே கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 0.88 விழுக்காடாக குறைந்துள்ளது.
குறிப்பாக, கரோனா முதல் அலையின்போது சென்னையில்,
- நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக 20.5 விழுக்காடாகவும்,
- குறைந்தபட்சமாக 1.2 விழுக்காடாகவும் பதிவாகி இருந்தது.
அதேபோல், இரண்டாம் அலையின்போது
- அதிகபட்சமாக 27.7 விழுக்காடாகவும்,
- குறைந்தபட்சமாக தற்போது 0.88 விழுக்காடாகவும் பதிவாகி வருகிறது.
இதையும் படிங்க: 'பழங்குடியினருக்கு 100% தடுப்பூசி சாத்தியமானது எப்படி?'