சட்டமேதை அம்பேத்கரின் 130ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இனிவரும் ஒவ்வொரு ஏப்ரல் 14ஆம் தேதியையும் சமத்துவ நாளாக கடைபிடிக்க வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் ஈ டிவி பாரத் நிருபரிடம் கூறியதாவது, 'அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட எழுபதாவது ஆண்டிலேயே இந்த நாடு இன்னும் இருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கருடைய 130ஆவது பிறந்தநாள் இந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வருகிறது.
கடந்த ஆண்டு அம்பேத்கரின் பிறந்த நாளின்போது பேசிய பிரதமர் மோடி, தன்னைப்போன்ற மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சார்ந்தவன். பிரதமராக வருவதற்குக் காரணமாக இருந்தது, அம்பேத்கர் வகுத்துத்தந்த அரசியலமைப்புச் சட்டம் தான் என்று கூறியுள்ளார்.
இந்தச் சூழலில் அம்பேத்கரின் லண்டன் வீட்டினை நினைவகமாகவும், அதனை பொதுமக்கள் காணும் விதத்திலும் செயல்படுவதற்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்திய அரசு தன் பங்கிற்கு வருகிற ஏப்ரல் 14ஆம் தேதியை சமத்துவ நாள் என்று கொண்டாடும் வண்ணம் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும். இதனை செயல்படுத்த பிரதமரை வலியுறுத்துகிறேன்.
இதுதொடர்பாக நான் நாடாளுமன்றத்திலே கடந்த வெள்ளிக்கிழமை பேசியுள்ளேன். எனினும், மீண்டும் அதை நினைவுபடுத்தும் விதமாக எனது கோரிக்கையை முன் வைக்கிறேன்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் மீது நம்பிக்கை உள்ளது: திருமா பேட்டி