சென்னை: 75ஆவது சுதந்திர தினத்தை அமிர்தப்பெருவிழாவாக கொண்டாடும் வகையில், கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொழில் நுட்பக்கண்காட்சி மற்றும் கதர் பொருட்கள் கண்காட்சியினை பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
பின்னர் பல்கலைக்கழகத்தின் மாற்றியமைக்கப்படும் பாடத்திட்டம் குறித்துப்பேசிய அவர், “அண்ணா பல்கலைக் கழகத்தின் மாற்றியமைக்கப்படும் பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நாளை நடைபெறும் கல்விக்குழுகூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இந்தப் புதிய பாடத்திட்டத்தில் புத்தகத்தை கடந்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது போன்றவை குறித்த புதிய பாடத்திட்டங்கள் இடம்பெறும்.
உரிய கட்டமைப்பு வசதி இல்லாமல் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்ட 18 கல்லூரிகளுக்கும் இரண்டு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் கல்லூரிகள் சரிசெய்துகொண்டால் அவர்களுக்கு மீண்டும் மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பு வழங்கப்படும்”, எனத் தெரிவித்தார்.
மேலும், “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டோம். மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி விடக்கூடாது. அதை அருகில் இருப்பவர்களும் தடுக்க வேண்டும்”, எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு வழக்கு; உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு