சென்னை: மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிக வரி வளாக கூட்டரங்கில் வணிக வரி இணை ஆணையர்களின் பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளரைச் சந்தித்த மூர்த்தி,
"பதிவுத் துறையின் வருவாயைப் பெருக்கவும், அரசுக்கு வரவேண்டிய சரக்கு - சேவை வரியை ஒழுங்காகச் செலுத்தவும், ஏமாற்றுபவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வரி ஏய்ப்புச் செய்பவர்களின் சரக்கு - சேவை வரி கணக்கை ரத்துசெய்யவும், மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.
மோசடி குறித்து விசாரிக்க குழு
வணிக வரித் துறையில் உள்ள 12 மண்டலங்களை 19 ஆக உயர்த்தவும் வணிக வரித் துறையில் 1,000 பேருக்கு பணி உயர்வு கொடுக்கவும் முடிவுசெய்துள்ளோம். வணிக வரித் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற மோசடி குறித்து விசாரிப்பதற்காக விரைவில் முதலமைச்சர் ஆலோசனைப்படி குழு அமைக்கப்படும்.
கரோனா பெருந்தொற்று பரவிவருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதையடுத்து சுகாதாரத் துறை, சில துறைகளிலிருந்து ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கிணங்க பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டை எளிமையான முறையில் நடத்த முதலமைச்சர் நல்ல முடிவெடுப்பார் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக அரசு வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் - அண்ணாமலை