சென்னை: கொடுங்கையூரில் நில பிரச்சனையால் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆதாயக் கொலை தொடர்பான வழக்கு நேற்று அல்லிக்குளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கின் சாட்சிகளான கொடுங்கையூரைச் சேர்ந்த குருநாத பாண்டியன், பிரபாகரன், ராஜன் மற்றும் மொட்டையத் தேவர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளித்து விட்டு திரும்புகையில் அவர்களை வழிமறித்த இருவர் இவ்வழக்கில் மேலும் சாட்சிக்காக வரக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குருநாத பாண்டியன், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெரியமேடு போலீசார் கொடுங்கையூரைச் சேர்ந்த மோகன் மற்றும் சுரேஷ்(எ)நெல்லை சுரேஷ் ஆகிய இருவரை இன்று (செப்.29) கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுரேஷ் (எ) நொள்ளை சுரேஷ் மீது, ஏற்கனவே கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சுரேஷ் கொடுங்கையூர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கால்கள் இழந்த காதலனை கரம் பிடித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை