சென்னை: எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்ய, நாளை (நவ.21) மத்திய குழுவினர் சென்னை வருகின்றனர். ஏழு அலுவலர்களைக் கொண்ட மத்திய குழு நவம்பர் 22 , 23 ஆகிய 2 நாள்களில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
நவ. 22 ஆம் தேதி ஒரு குழு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளுக்கும், மற்றொரு குழு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் சென்று ஆய்வு செய்கின்றனர். நவம்பர் 23 ஆம் தேதி ஒரு குழு மயிலாடுதுறை திருவாரூர், தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு, மற்றொரு குழு ராணிப்பேட்டை வேலூர் மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்வார்கள்.
பின்னர் 24 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, மழை பாதிப்பு தொடர்பான அறிக்கை அளிப்பர். பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியருடன் சென்று ஆய்வு நடத்தப்படும். பாதிப்புகளை சீரமைக்க ரூ. 2,629 கோடி கேட்கப்படும். முதற்கட்டமாக ரூ. 549.63 கோடி வழங்க வலியுறுத்தப்படும்.
இன்னும் பல மாவட்டங்களில் இருந்து சேத விவரங்கள் தினமும் வந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப ஒன்றிய அரசிடம் நிவாரண தொகை கேட்கப்படும். மேலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் மழை பெய்து வருவதால் பாதிப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளது.
மழை நாள்களில் பல மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் பிற சான்றிதழ் தொலைந்ததாக கூறினர். அது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விவரங்கள் கேட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை இறப்பு, பயிர் இழப்பு, மனித பாதிப்பு போன்றவற்றுக்கு முதற்கட்டமாக நிதி கோரப்படும்.
வடசென்னை பகுதியில் ஏற்பட்டுள்ள அதிகளவு வெள்ள சேத பாதிப்பிற்கு, 11 ஐஏஎஸ் அலுவலர்கள் உள்பட பல உயர் அலுவலர்களை நியமித்து, நிவாரண பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மழையால் அநேகமான ஆற்றில் வெள்ளம் வருவதால், பாதுகாப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன," எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் மூலம் 11 பேரை மீட்ட விமானப்படை