சென்னை: அகில இந்திய சிகை அலங்கரிப்புச் சங்கத்தின் சார்பில் கரோனா தொற்று காலத்தில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் 100-க்கும் மேற்பட்ட சிகை அலங்கார வல்லுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கரோனா ஊரடங்கு காலத்தில் யாரும் பசியால் பாதிக்கக் கூடாது. அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடுத்துவருகிறோம்.
![தயாநிதி மாறன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06:54:34:1626096274_tn-che-08-dayanithimaran-7209106_12072021183208_1207f_1626094928_844.jpg)
தற்போது கரோனா தொற்றின் பாதிப்பு தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியிருக்கிறது. சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்தை தொட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் கரோனா பாதிப்பு குறைந்துவிட்டது என்று அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “உலக நாடுகளுக்குத் தடுப்பூசி வழங்குவதைவிட தமிழ்நாட்டிற்கு குறைவான தடுப்பூசியைத்தான் மத்திய அரசு வழங்குகிறது. இதனால் தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவருகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.