சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் பாலகுமாரின் மகள் தீபிகா(20). இவர், அதே பகுதியில் வசித்து வரும் சாய்குமாரை(21) ஒன்பது ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அவரின் காதல் விவகாரத்தை அறிந்த பாலகுமார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவரையும் கண்டித்துள்ளார்.
இதனையடுத்து சாய்குமாரும், தீபிகாவும் திருப்பதிக்குச் சென்று திருமணம் செய்ய முயற்சித்தனர். அதனை அறிந்து பாலகுமார் தீபிகாவை, வலுக்கட்டாயமாக அழைத்துவந்து அடைத்து வைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தப்பித்த தீபிகா, விஜயவாடாவில் சாய்குமாரை திருமணம் செய்து கொண்டார். சாதி மறுப்புத் திருமணத்திற்குப்பிறகு தந்தை பாலகுமார் பிரச்னை செய்யாமல் இருக்கவும், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கோரியும் தீபிகா சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.