பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் முன்பும், தேர்வு முடிவுகள் வெளியான பின்பு 10 வேலை நாட்களுக்குள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்க வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் விதிமுறையாகும்.
அதன் அடிப்படையில் தற்போது கலை அறிவியல் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் 19ஆம் தேதி மாநில அரசின் பாடத்தில் பயின்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால் சி.பி.எஸ்.சி.யில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
இதனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் சாருமதி, அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ’2019- 20 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வந்த பின்பு 10 வேலை நாட்களுக்குள் விண்ணப்பிக்கும் வகையில் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.