தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். என்றாவது ஒரு நாள் தங்களை அரசு பணி நிரந்தரப்படுத்தும் என்ற நம்பிக்கையில் இரவு, பகல் பார்க்காமல் பணியாற்றும் இவர்களுக்கு, அவ்வப்போது ஏற்படும் இயற்கை சீற்றப் பகுதிகளை மறுசீரமைக்கும் சவாலானப் பணிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுவதும், அப்போது அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக விரைவில் மின்துறை ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்று துறை அமைச்சர் பேசுவதும் வாடிக்கையான ஒன்று.
சட்ட விதிகளின்படி ஒருவர் அரசுத்துறையில் ஒப்பந்த ஊழியராக ஓராண்டு பணியாற்றினாலே அவரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தாலும், மின்துறை ஒப்பந்த ஊழியர்கள் விஷயத்தில் அரசு சட்ட விதிகளை பின்பற்றுவதேயில்லை என வேதனைப் படுகின்றனர் இவர்கள்.
என்றாவது பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையையும் 'கேங்மேன்' என்ற பணியிடத்தை உருவாக்கி உடைத்துவிட்ட மின்சாரத்துறை, இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை சொல்லி வேலையை மட்டும் வாங்கி விட்டு, ஏமாற்றி விட்டது என்றும் புலம்புகின்றனர்.
மின்சாரப் பணிகளின் போது உயிரிழப்பு ஏற்பட்டால், தங்களைக் கேட்காமல் மின் கம்பத்தில் ஏறி விட்டார் என்றும், இறந்தவர் யார் என்றே தெரியாது என்றும், வாக்குமூலம் கொடுப்பதை நிரந்தப் பணியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது போல் கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின் விபத்துகளில் இறந்தும், அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதில் மற்றொரு வேதனையான செய்தி என்னவென்றால், கடைசி வரை பணி நிரந்தரமே கிடைக்காமல் பலர் இறந்தே போய்விட்டனர் என்பது தான்.
15 ஆண்டுகளாக அனுபவம் பெற்று வேலை பார்க்கும் தங்களைப் பணி நிரந்தரப்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கடைசி நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள்.
இதையும் படிங்க: நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் - ரயில்வே ஒப்பந்ததாரர்கள் போராட்டம்