மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று (ஏப். 1) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "51ஆவது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுகிறது.
இந்தியத் திரைத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர் எனத் திரைத் துறையில் அவரது பங்கு அளப்பரியது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்நாட்டில் தாதா சாகேப் பால்கே விருது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலசந்தர், தயாரிப்பாளர் எல்.வி. பிரசாத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரஜினிகாந்த் கலைமாமணி, பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது அவருக்கு அவரது ரசிகர்களும், திரைத் துறையினரும், முக்கியப் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ’வரும் தேர்தலில் 100% ரஜினி ஆதரவு யாருக்குமில்லை’