சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கனரக, இலகுரக ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 8 விழுக்காடு வரை கட்டணம் உயரலாம் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 42 சுங்கச்சாவடிகள் இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளிலும், மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளிலும் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயரும் என அறிவித்துள்ளது.
சுங்கக் கட்டணம் உயர்வு
இந்த 14 சுங்கச்சாவடிகளுக்கும் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், சுங்கக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொருளாளர் செ. தனராஜ் நம்மிடம் கூறுகையில், "தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் கரோனா பேரிடர் காலத்தில் சுங்கக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது முற்றிலும் நியாயமல்ல. இன்னும் கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். இதன் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.
![14 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12829229_ss.png)
தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநர் பவன் குமார் கூறுகையில், "ஆண்டுதோறும் ஒப்பந்தப்படி இந்தக் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.
எனவே, இது புதிய முடிவு இல்லை. கட்டண உயர்வை பொறுத்தவரை 8 விழுக்காடு வரை உயரும். கட்டண உயர்வு குறித்து முழுமையான விவரம் விரைவில் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களின் கூற்றுப்படி,
- திருச்சி-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடி
- தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை சுங்கச்சாவடிகள்
- திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி
உள்ளிட்ட 14 சுங்கச்சாவடிகளில் இந்தக் கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலைத் துறை அமலுக்கு கொண்டுவரும்.
இதையும் படிங்க: 'மகப்பேறு விடுப்பு வரன்முறையில் எந்த பாகுபாடும் கூடாது - நீதிமன்றம் அறிவுறுத்தல்'