சென்னையிலிருந்து நேற்று (டிச.16) காலை துபாய் செல்லவிருந்த ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமானத்தில் பெருமளவு கணக்கில் வராத பணம் வெளிநாட்டிற்கு கடத்தப்பட உள்ளதாக பெங்களூரிலுள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலகத்திலிருந்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் நேற்று (டிச.16) காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புறப்படவிருந்த ஃபிளை துபாய் விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது கர்நாடகா மாநிலத்தைச் சோ்ந்த 32 வயது ஆண் பயணி ஒருவர் மீது அலுவலர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவருடைய சூட்கேஸ், பைகளை சோதனையிட்டனர். அவருடைய சூட்கேஸ் உள்ளே இருந்த ஆவணங்கள் அனைத்தையும் சோதனையிட்டனர். அதனுள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா், சவுதி ரியால் வெளிநாட்டு பணம் பெருமளவு இருந்தன.
அவரிடமிருந்து மொத்தம் 68.09 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், வேறு யாரோ ஒருவர் கொடுத்து அனுப்பிய பணத்துடன் இவர் துபாய் செல்கிறார் என்பதும் இவை அனைத்தும் கணக்கில் இல்லாத பணம் என்றும் தெரியவந்தது. இதையடுத்து சுங்க அலுவலர்கள் இது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசை வார்த்தை கூறி சிறுவர்களிடம் ரூ.8 லட்சம் மோசடி: பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு