சென்னை: அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய விற்பனை இணையதளங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் பிக் பில்லியன் டே என்ற பெயரில் இரண்டு நிறுவனங்களும் பல சலுகைகள் தள்ளுபடிகள் அறிவித்து பொருட்களை ஆன்லைனில் போட்டி போட்டு விற்பனை செய்கின்றன.
அதில் பிரபல நிறுவனங்களின் பொருட்கள் சலுகை விலைகளில் கிடைப்பதால் பொதுமக்களும் பலர் ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ணா என்பவர், அவ்வாறு அமேசான் இணையதளத்தில் பிரபல துணி நிறுவனமான வேன் ஹுசன் நிறுவனத்தில் இரண்டு டிராக் பேண்ட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ததை அடுத்து மறுநாளே அமேசான் நிறுவனத்தின் ஊழியர் அதை டெலிவரி செய்துள்ளார்.
அமேசான் டெலிவரி ஊழியர் கொடுத்துச் சென்ற பேக்கேஜை திறந்து பார்க்கும் பொழுது கிருஷ்ணா ஆர்டர் செய்த இரண்டு வேன் உசேன் டிராக் பேண்ட்டுகள் தனித்தனியாக பேக் செய்யப்பட்டு இருந்தது. ஒவ்வொன்றையும் பிரித்துப் பார்க்கும்போது, ஒரு பேக்கேஜில் வேன் உசேன் கம்பெனியின் ஒரிஜினல் துணிகளும், மற்றொரு வேன் உசேன் பேக்கேஜில் போலியான நிறுவனத்தின் துணிகளும் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக அமேசான் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, பணத்தை திருப்பித் தருவதாகவும் பொருட்களை மாற்றித் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் வாடிக்கையாளரை மோசடி செய்ததாக ஒத்துக்கொள்ள முடியாது என தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல்... சுங்கத்துறை அதிரடி