தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் நாள்தோறும் பன்மடங்காக அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை செலுத்த அரசு பரிந்துரை செய்தது. இந்த நிலையில், அரசு மருத்துவமனையை தவிர தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்து கிடைக்காமல், கள்ளச்சந்தையில் பல லட்ச ரூபாய் அளவிற்கு அதனை வாங்கும் நிலை ஏற்பட்டது.
இதனைத் தடுக்கும் வகையில், முதல்கட்டமாக தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் மருந்து விற்பனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் தொடங்கப்பட்ட மருந்து விற்பனை, பொதுமக்களின் கூட்டம் காரணமாக தற்போது ஐந்து மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கீழ்ப்பாக்கத்திலிருந்து நேரு ஸ்டேடியத்திற்கு...
இருப்பினும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் பொதுமக்களின் கூட்டம் குறைந்தபாடில்லை. இதனால் கரோனா விதிமறைகள் காற்றில் பறந்தன. இந்த அலட்சியப் போக்கை தவிர்க்கும் விதமாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையத்தை கீழ்ப்பாக்கத்திலிருந்து நேரு ஸ்டேடியத்துக்கு தமிழ்நாடு அரசு மாற்றியது. தொடர்ந்து இம்மருந்து நேற்று முதல் இங்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (மே.15) காலையிலிருந்து தான் விற்பனை தொடங்கியது.
ஒரு நாளைக்கு 300 நபர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்டோர் நேரு ஸ்டேடியதிற்கு முன்பு குவிந்தனர். தொடர்ந்து மருந்து கிடைக்காததால் மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கும்பலாக வந்தனர்... கூட்டத்தை மறந்தனர்...
தொடர்ந்து காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிறகே போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும் காவல் துறையினர் மருந்து வாங்கும் இடத்தை சரியாக கட்டமைக்கவில்லை எனவும், மக்கள் வரிசையில் நிற்காமல் கும்பலாக சென்று மருந்து வாங்கியதாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய நபர் ஒருவர், "நேற்று முதல் வரிசையில் காத்திருக்கிறோம். ஆனால் காலையில் ஒரு குழு வந்தது. அவர்கள் நேரடியாக உள்ளே சென்று விற்றனர். நாங்கள் வரிசையில் நின்று வாங்கி செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் முறையான கட்டமைப்பு இல்லை. விற்பனை மையத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள் யாரும் இல்லை. காவல் துறை சரியாக செயல்படவில்லை. கீழ்பாக்கம் சரி இல்லை என்று இங்கே மாற்றினார்கள். ஆனால் இங்கு அதைவிட மோசமாக உள்ளது" என வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் காவல் துறை பொதுமக்களை சரியான வரிசையில் நிற்கவைத்து அனைவருக்கும் மருந்து கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.