சென்னை: தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி சீட்டுகளை முற்றிலுமாக ஒழிக்க கடந்த 6 ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை திட்டமிட்டது.
அதன் அடிப்படையில், கடந்த 6ஆம் தேதி முதல் காவல்துறையினர் வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தியதாக 80 வழக்குகள் பதியப்பட்டு 109 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து 11.5 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி Vs சேலம்
அதே போல் குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக 1075 வழக்குகள் பதியப்பட்டு 1096 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 89.58 லட்சம் மதிப்புள்ள 9879 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில், அதிகபட்சமாகத் தருமபுரி மாவட்டத்தில் 3649 கிலோ மற்றும் சேலம் மாவட்டத்தில் 1869 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக 50 வழக்குகள் பதியப்பட்டு, 63 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 80,610 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கடும் நடவடிக்கை
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை மற்றும் பதுக்கி வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லி வந்த பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி