சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கரய்யா நேற்று (ஜூலை 15) தனது 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் குரோம்பேட்டை பகுதியில் உள்ள சங்கரய்யாவின் வீட்டிற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
சங்கரய்யாவை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,"சங்கரய்யா அவரின் 19ஆவது வயதில் இந்திக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டார்.
எரிமலை போன்றவர் சங்கரய்யா
அன்றிலிருந்து தற்போது 80 ஆண்டு காலம் வரை வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், சாதிய பாகுபாடுகளை எதிர்த்தும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும் ஓயாமல் போராடி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு முன்னுதாரணமாக அவர் திகழ்ந்துள்ளார். போராட்டமே வாழ்க்கை என வாழ்ந்தவர், மிகவும் எளிமையானவர். மக்களின் பிரச்சினைகளுக்காக எரிமலை போல் போராடியவர்.
மத்தியில் மதவெறி என்கிற பாஜக ஆட்சி இந்தியாவை நிர்மூலமாக்கி வருகிறது. பாசிச குணம் கொண்டுள்ள பாஜகவை எதிர்க்க இந்தியாவில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் ஒரு உந்து சக்தியாக சங்கரய்யா என்றென்றும் திகழ்வார்.
நூற்றாண்டு விழாவின் வேண்டுகோள்
சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு நிகழ்ச்சி மூலம் கொண்டாட இருக்கிறது. அதில் அவரின் வாழ்க்கையின் சிறப்பு குறித்தும் இளைஞர்களிடம் உணர்த்தப்படும்.
சாதி,மதங்களை எதிர்த்து சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டும்; சாதி, மதம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க நடத்தப்படும் போராட்டங்களில் இளைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இந்த நூற்றாண்டு விழா நடத்தப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'சங்கரய்யா ஒரு நூற்றாண்டின் செயற்பாட்டாளர்' - சீதாராம் யெச்சூரி