சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. வரதராசன் மறைவுக்கு, அக்கட்சி இரங்கல் கடிதம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான இரங்கல் கடிதத்தில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான கே.வரதராசன் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு கட்சியின் மாநில செயற்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது.
கரூரில் அவரது மகன் வீட்டில் தங்கியிருந்த அவர், சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த நிலையில், சனிக்கிழமையன்று (மே 16) பகல் 2 மணியளவில் காலமானார்.
மறைந்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்வதுடன், மாநிலம் முழுவதும் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மறைந்த தலைவரது இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று காலை 11 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.