இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மூத்த தலைவர்
ஜி. ராமகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜன் ஆகியோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.
பின்னர் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் மாநிலக் குழு எடுத்த முடிவின்படி திமுக கூட்டணியுடன் போட்டியிடுவது என முடிவு செய்து எங்களுடைய ஆதரவை தெரிவிக்க வந்துள்ளோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவித்துவிட்டு அதிமுக அரசு திடீரென மாநகராட்சி மேயரை மறைமுகமாக தேர்ந்தெடுப்பதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும் ஆளும் அதிமுக அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனாலேயே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால் யாராவது வழக்கு தொடுப்பார்கள், அப்படி வழக்கு தொடர்ந்தால் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி விடலாம் என எண்ணுகிறார்களோ என்ற கேள்வியும் எழுகிறது எனத் தெரிவித்தார்.
மேலும், மறைமுகமாக மேயரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் கவுன்சிலராக வெற்றி பெற்றவர்களை குதிரை பேரம் மூலமாக வளைக்க ஏதுவாக இந்த சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது என குற்றம்சாட்டினார் பாலகிருஷ்ணன்.
இந்த சந்திப்பின் போது திமுக பொருளாளர் துரைமுருகன், கழக உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.வா.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.