ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில், இன்று(ஜூன்.4) புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டன. ஆனால், தொன்மையான செம்மொழி 'தமிழ்' அதில் சேர்க்கப்படவில்லை.
இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என, ஒன்றிய அரசிடம் வலியுறுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி, இந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு அலுவலர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் வலியுறுத்தினார்.
முன்னதாக, மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தினை பதிவு செய்திருந்தார். இதற்கு, இந்த இணைய வசதி படிப்படியாகப் பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இன்னும் இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என, ஒன்றிய அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.