சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசும் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை அனுப்பிவருகிறது. தற்போது கரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனிடையே தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து புனேயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 42 பார்சல்களில் 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
தடுப்பூசி பாா்சல்களை சென்னை விமானநிலைய அலுவலர்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனா்.
அவா்கள் பார்சல்களை குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகம் கொண்டு சென்றனா். அங்கிருந்து தடுப்பூசிகள் தமிழ்நாடு முழுவதற்கும் தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - மாநகராட்சி வேண்டுகோள்!