சென்னை: கரோனா தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசினால் கோவாக்சின் தடுப்பூசிகள் ஏழு லட்சத்து 82 ஆயிரமும், கோவஷீல்டு தடுப்பூசிகள் 47 லட்சத்து 43 ஆயிரமும் என மொத்தம் 54 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டது.
ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. முதலில் சுகாதாரத்துறையினருக்கும், அதனைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்பொழுது மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நார்வேயில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 பேர் உயிரிழப்பு!
ஜனவரி 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை 47 லட்சத்து 5 ஆயிரத்து 473 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, 15 லட்சம் கோவஷீல்டு தடுப்பூசிகளும், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் விரைந்து அனுப்ப வேண்டுமென மத்திய அரசிற்கு மக்கள் நல்வாழ்வு துறை கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் 4,998 மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 3,995 இடங்களிலும், தனியார் மருத்துவமனைகளில் 1,003 இடங்களிலும் போடப்பட்டு வருகின்றன. சென்னையில் 362 அரசு மருத்துவமனைகளிலும், 260 தனியார் மருத்துவமனைகளிலும் என 622 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
மாநிலத்தில் முதல் தவணை தடுப்பூசி 40 லட்சத்து 82 ஆயிரத்து 442 பேருக்கும், 2ஆம் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 16 ஆயிரத்து 430 பேருக்கும் என 46 லட்சத்து 98 ஆயிரத்து 872 பேருக்கு போடப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி போடப்பட்ட விபரங்களை https://dashboard.cowin.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் தகவலுக்கும், மாநில அரசு வெளியிடும் தகவலுக்கும் இடையே பெரியளவில் மாறுபாடு இருகிறது.
திருவான்மியூரில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் உயிரிழப்பு!
பொது சுகதாரத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, தமிழ்நாட்டில் தற்பொழுது 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. மேலும், 20 லட்சம் தடுப்பூசி அனுப்ப வேண்டும் என மத்திய அரசிற்கு 6 முறை கடிதம் அனுப்பியுள்ளோம். தடுப்பூசிகள் எப்போது வரும் என்பது குறித்து நாளை (ஏப்ரல் 19) தெரியவரும் என தெரிவித்தார்.
சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வமாக சென்றாலும், மையங்களில் தடுப்பூசி இல்லை என திருப்பி அனுப்புகின்றனர். இதனிடையே தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட சிலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவர்கள் யாரும் தடுப்பூசி பக்கவிளைவுகள் காரணமாக மரணிக்கவில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.