சென்னை: கடந்த 26ஆம் தேதி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி திருவொற்றியூர் மண்டலத்தில் 1,964 பேரும், மணலி மண்டலத்தில் 1,800 பேரும், மாதவரம் மண்டலத்தில் 2,357 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2,817 பேரும், ராயபுரத்தில் 2,971 பேரும், திருவிக நகரில் 3,354 பேரும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கடந்த வாரம் முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் தொகுதி அடங்கிய திருவிக நகர் மண்டலத்தில் உச்சமடைந்த கரோனா தொற்று தற்போது கடந்த சில நாள்களாக குறையத் தொடங்கியுள்ளது.
மேலும், திருவிக நகர் மட்டுமல்லாமல் வடசென்னைக்குள்பட்ட திருவொற்றியூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, மாதவரம், ஆகிய பகுதிகளில் தொற்று பாதித்தவர்களின் விகிதம் கணிசமாக குறைந்து வருகிறது.
கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒப்பீட்டின்படி அதிகபட்சமாக மணலி மண்டலத்தில் 52 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் மண்டலத்தில் 33 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற நான்கு மண்டலங்களிலும் தொற்று பாதித்து சிகிச்சை பெறுவோர் விகிதம் முந்தைய நாளை விட குறைவாகவே உள்ளது.
குறிப்பாக, மணலி மண்டலத்தில் கடந்த 22ஆம் தேதி தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,413 ஆக இருந்தது. இது 23ஆம் தேதி 1,436 ஆகவும், 24ஆம் தேதி 1,579 ஆகவும், 25ஆம் தேதி 1,718 ஆகவும், 26ஆம் தேதி 1,800 ஆகவும் உள்ளது.
மற்ற மண்டலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும், மணலி மண்டலத்தில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், மணலி மண்டலத்தில் நோய் தொற்று பாதிப்பு விகிதம் 15.8 விழுக்காடாக உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் குறையத் தொடங்கிய கரோனா பாதிப்பு!