சென்னை: ஜூலை 31ஆம் தேதியின் கரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,60,897 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,986 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு 25,59,597 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பு குணமடைந்து கடந்த 24 மணிநேரத்தில் 2,178 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,04,805 பேர் வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பால் ஒரு நாளில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,076 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்து தற்போது 20,716 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் 204 பேருக்கும், கோயம்புத்தூரில் 246 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும், ஈரோட்டில் 165 பேருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்புகளைவிட இரண்டாவது அலையில் அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதனையடுத்து, தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.
தொடர்ந்து குறைந்துவந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களாக அதிகரித்துவருகிறது. இது பொதுமக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.