சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடுகள் நடப்பதாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அறக்கட்டளையின் அறங்காவலர் தேர்தல் நடத்த தடை கேட்டும் வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சுரேஷ்குமார், ” பச்சையப்பன் அறக்கட்டளையின் மாற்றம் செய்யப்பட்ட விதி அடிப்படையில், அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வேண்டும். அதற்காக அறக்கட்டளை நிர்வாகியாக உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகத்தை அறக்கட்டளை தலைவராக இந்த நீதிமன்றம் நியமிக்கிறது. அவர் அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும்.
மேலும், பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான அண்ணா அரங்கம், அம்மா அரங்கம் ஆகியவற்றை ’முகூர்த்தம் ஈவன்ட் மேனேஜ்மென்ட்’ என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை ரத்து செய்யப்படுகிறது. குத்தகை எடுத்த நிறுவனம் அரங்கங்களை 10 நாட்களுக்குள் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் ” எனத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, பச்சையப்பன் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.அதில், அறக்கட்டளையை நிர்வகிக்க குழு அமைக்கப்பட்டது முறையானது அல்ல என்றும், குத்தகை காலம் முடியும் வரை அரங்கங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ” இந்த வழக்கை தனி நீதிபதி அனைத்து அம்சங்களோடு மீண்டும் விசாரிக்க வேண்டும். தனி நீதிபதி யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளதால், அறக்கட்டளை நிர்வாகத்தை உயர் நீதிமன்ற சொத்தாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவு