சென்னை: அரியலூர் மாவட்டம் இடையத்தான்குடி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் டால்மியா சிமென்ட் நிறுவனத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், இடையத்தான்குடி கிராமத்துக்கு அருகில் குவாரி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அந்தக் குவாரிகளிலிருந்து கனிமப் பொருள்களை டிப்பர் லாரிகள் மூலம் தங்கள் கிராமத்தின் வழியாகக் கொண்டுசெல்வதால் காற்று மாசும், ஒலி மாசும் ஏற்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 24 மணி நேரமும் கனிமப் பொருள்கள் கொண்டுசெல்லப்படுவதால், இரவு நேரங்களில் டிப்பர் லாரிகளை இயக்க தடைவிதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
இதையடுத்து, டால்மியா சிமென்ட் நிறுவனத்தின் உரிமத்தை ஆய்வுசெய்ய அரியலூர் சுற்றுச்சூழல் பொறியாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உரிம விதிகளின்படி குவாரி நடவடிக்கைகள் இருப்பதை உறுதிசெய்யவும், உரிம விதிகளை மீறி கூடுதல் பரப்பில் குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்வது கண்டறியப்பட்டால் டால்மியா சிமென்ட் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்திவைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும் இரவு நேரங்களில் கனிமப் பொருள்கள் கொண்டு செல்லக்கூடாது என டால்மியா சிமென்ட் நிறுவனத்துக்கு அறிவுறுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கோவை மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் கைது