நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டு 11,900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேட்பு மனுவில் தகவல்களை மறைத்த நத்தம் விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்ககோரி, திண்டுக்கல்லை சேர்ந்த சபாபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், நத்தம் விஸ்வநாதன் 4.75 கோடி வருமான வரி செலுத்தாதது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
ஏற்கனவே, 2.79 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தாததால் கடந்த 2019 ஆம் ஆண்டு அவரது சொத்துகளை முடக்கம் செய்ய வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்தத் தகவல்களை நத்தம் விஸ்வநாதன் தனது வேட்புமனுவில் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். இதைச் சரிபார்க்காமல் தேர்தல் ஆணையம் விஸ்வநாதனை போட்டியிட அனுமதித்துள்ளதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர் கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மனுதாரர் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும், இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தால் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தொடர்ந்து இது போன்ற புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் எனப் பார்க்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.