பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வீரம நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரிடம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி அன்று கத்தியைக் காட்டி மிரட்டி அதே பகுதியைச் சேர்ந்த கவிதமிழ், ஓவியன், முருகேசன் ஆகிய மூவர் செல்போன், ஒரு சவரன் தங்கச் செயின், 12 ஆயிரத்து 700 ரூபாய் பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், தொடர்ந்து, அக்டோபர் மூன்று, ஏழாம் தேதிகளில் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறிய ஆனந்தன், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தனது மனைவியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்று பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இருவரும் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.