சென்னை: 2021-22ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவையில் திருத்திய நிதிநிலை அறிக்கையின் விவாதத்தின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு சென்னைப் பள்ளிகளில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் ஏற்கனவே CITIIS, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் எட்டு சென்னைப் பள்ளிகளில் 21.77 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆறு சென்னைப் பள்ளிகளில் 17.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் உள்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை தொடக்கப் பள்ளிக்கு 3.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 2.43 கோடி ரூபாயும், நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 2.77 கோடி ரூபாய், தண்டையார்பேட்டை மேல்நிலைப்பள்ளிக்கு 2.88 கோடி ரூபாய், தண்டையார்பேட்டை தொடக்கப் பள்ளிக்கு 5.69 கோடி ரூபாய் என மொத்தம் 17.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், CITIIS, சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின் கீழ் சென்னைப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டப்பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு. சென்னைப் பள்ளிகளில் நவீன முறைகளை கொண்டு ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும், மாணவர்களின் கற்றல் திறனும் மேம்படுத்தப்படும் என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Chennai: தனியார் பள்ளிகளுக்கு ஈடாக மாநகராட்சிப் பள்ளிகள் - நிதி ஒதுக்கீட்டுப் பணிகள் தீவிரம்