வடகிழக்குப் பருவ மழைக் காலங்களில் ஏற்படுத்தவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது, “2019ஆம் ஆண்டிற்கான வடகிழக்குப் பருவமழை எதிர்கொள்வது குறித்து காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் அதிகம் தண்ணீர் தேங்கும் இடம் எது, தண்ணீர் தேங்கினால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 13ஆவது மண்டலமான வேளச்சேரி பகுதி பூலோக ரீதியில் தாழ்வான பகுதி என்பதால், அங்கு அதிகம் தண்ணீர் தேங்கும். இதனால் அங்கு தேங்கும் தண்ணீரை வெளியேற்றக் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மின்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 துறை அலுவலர்களுடன் சுமார் ஐந்தாயிரத்துக்கும், அதிகமான தற்காலிக பணியாளர்களை நியமித்து வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஏற்படும் பேரிடர்களைச் சமாளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் அந்தந்த பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளை அரசுக்குத் தெரிவிக்க 1913 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்களைத் தடுப்பதற்கென 500 வீடுகளுக்கு ஒரு மருத்துவக் குழு என்ற அடிப்படையில் மாநகர் முழுவதும் மூன்றாயிரத்திற்கும் அதிகமான குழுக்கள் அமைக்கப்பட்டு நோய்த்தடுப்புகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பருவ மழைக்காலங்களில் 15 மண்டலங்களிலும் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என அனைவரும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றார்.